
கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-தாபூங் ஹாஜி விவகாரம் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையை விவாதிப்பதற்கான இன்றைய சிறப்புக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை சபாநாயகர் மறுத்ததை அடுத்து, பெரும்பாலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளியேறினர்.
அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி வரும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ள முடியாத சூழல் இருந்ததால், கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைமை கொறடா Datuk Seri Takiyuddin Hassan முன்னதாக கோரிக்கை விடுத்தார்.
பிரதமர்தான் இச்சிறப்புக் கூட்டத்திற்கு கோரிக்கை விடுத்திருந்ததால், அவரின் வருகை முக்கியம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று காலைதான் RCIயின் அறிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. அதே சமயம் அந்த அறிக்கை மீதான வாக்கெடுப்பு எதுவும் இன்று நடைபெறாது என்பதை Takiyuddin சுட்டிக் காட்டினார்.
எனினும் அமைச்சரவையைப் பிரதிநிதித்து துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidiயும் பிற அமைச்சர்களும் வருகை தந்திருந்ததால், நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர மக்களவை சபாநாயகர் Johari Abdul முடிவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவையிலிருந்து வெளியேறினர். எனினும் முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அணியைச் சேர்ந்த பெர்சத்துவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறும் போராட்டத்தில் இணைய மறுத்து விட்டனர்.
மத விவகாரங்களுக்கான அமைச்சர் Zulkifli Hasan, RCI அறிக்கையைச் சமர்ப்பித்தார். இரண்டாவது நிதியமைச்சர் Amir Hamzah Azizan விவாதத்தை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில், அன்வார் உடல் நலம் தேறி வருவதாகவும் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் அவர் தொடர்ந்து physiotherapy சிகிச்சை மேற்கொள்வார் எனவும் பிரதமரின் மூத்த ஊடகச் செயலாளர் Tunku Nashrul Abaidah தெரிவித்துள்ளார்.
தாபுங் ஹாஜி தொடர்பான RCI அறிக்கை குறித்து விவாதிக்க இன்று நடைபெற்ற நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு பிரதமர் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாத்ரீகர்கள் நிதியம் தொடர்பான RCI அறிக்கை, 2022 ஜூலையில் நிறைவு செய்யப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜூலை 29 அன்று பொதுப் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
2014 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தாபூங் ஹாஜியின் நிர்வாகம், முதலீடு மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றில் மோசமான குறைபாடுகள் இருந்ததை அவ்வறிக்கை கண்டறிந்தது.



