
கோலாலம்பூர், செப்-8-அமைச்சரவை உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பு வலுவாகவே இருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியிருக்கிறார். சில நேரங்களில் நிலைமை மாறுபட்டதாகத் தோன்றினாலும், தெளிவான கொள்கைகள், அரசியல் நிலைத்தன்மை, அமைச்சரவையில் உள்ள ஒத்துழைப்பு ஆகியவை அரசாங்கத்தின் செயல்பாட்டை சீராக முன்னெடுக்க உதவுவதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை உறுப்பினர்களிடையே பொதுவாக நல்ல உடன்பாடு நிலவுகிறது. அது நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன், நாட்டிற்கான திட்டங்களைத் தொடர்ந்து வகுத்துச் செயல்படுத்தவும் உதவுகிறது. அரசாங்கம் அந்நிலைத்தன்மையைப் பயன்படுத்தி தனது திட்டங்களைத் தொடரவும், நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தவும் வேண்டும். இதுவரை அடைந்த சாதனைகளில் அதீத மனநிறைவு கொள்ளாமல் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என புத்ராஜெயாவில் தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சின் ஊழியர்களுடனான சந்திப்பில் அன்வார் வலியுறுத்தினார்.
இதனிடையே, பிரதமருக்கும் துணைப் பிரதமரும் பாரிசான் நேஷனல் தலைவருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidiக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அண்மைய அமைச்சரவைக் கூட்டங்கள் வழக்கத்தைவிட குறுகிய நேரமே நடைபெற்றதாகவும் Bloomberg முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது. ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் BN, Pakatan Harapan-க்கு எதிராக போட்டியிட வேண்டும் என்ற Zahidடின் நிலைப்பாடே இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டுக்குக் காரணம் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.
எனினும், அவ்வாறான கூற்றுகளை Zahid மறுத்துள்ளார். DAP பொதுச் செயலாளர் Loke Siew Fookக்குடனான உறவு சிறப்பாகவே இருப்பதாகவும், அமைச்சரவைக் கூட்டங்கள் வழக்கம் போல் பிற்பகல் 1 மணியளவில் முடிவடைவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பதவிக்காலம் நிறைவடையும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் BN-இன் உறுதிப்பாட்டில் மாற்றமில்லை என்றும் Zahid உறுதிபடக் கூறினார்.



