
அலோர் ஸ்டார், ஜூன் 25: அலோர் ஸ்டாரில் காற்பந்து விளையாடிய பின்னர், 14 வயது மாணவர் ஒருவரை அவரது இரு நண்பர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காணொளியில், மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு கீழே விழுந்த பின்னரும் மீண்டும் உதைக்கப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜூன் 16-ஆம் தேதி மாலை, தாமான் ஊடா (Taman Uda) காற்பந்து மைதானத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மாணவரின் தந்தை பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆரம்ப விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவரும் இரு சந்தேகநபர்களும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து, ஒரே பள்ளி மற்றும் வகுப்பில் பயின்று வருவது தெரியவந்துள்ளது.
தனது காதலியை மாணவர் தொந்தரவு செய்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்தக் குற்றச்சாட்டை மாணவர் மறுத்துள்ளார். சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகே இது வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் மாணவருக்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



