கோலாலம்பூர், செப்டம்பர் 30 – அஸ்தி எனப்படும் அறிவியல் புத்தக்கத் தொழில்நுட்ப இயக்கத்தின் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா, 18ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்து, வெற்றிகரமாக நேற்று நிறைவடைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில், தமிழ்ப்பள்ளிகளின் ஒத்துழைப்புடன் நேரடியாகத் தேசிய அளவில் இவ்விழா நடந்தேறியதாக, அதன் தலைவர் முனைவர் முகமட் யூனுஸ் யாசின் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முதலில் பள்ளி மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டமாகத் தேசிய அளவில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக, இரு நாட்களுக்கு இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா நடைபெற்றது.
மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைக்காக நடைபெற்ற இப்போட்டியில், பெற்றோர்கள் மட்டுமல்லாது, ஏறக்குறைய 2,000க்கு மேற்பட்ட பார்வையாளர்களும் வருகை புரிந்ததாக, இந்நிகழ்ச்சியின் இயக்குநர் சுபாஷ் கிருஷ்ணன் கூறினார்.
இதனிடையே, தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில், 70 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த இளம் ஆய்வாளர்கள் களம் கண்டதாக சுபாஷ் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற ஒவ்வொரு பள்ளிகளுக்கும் 1000 ரிங்கிட் தொடங்கி 500 ரிங்கிட் வரை பரிசுத் தொகையுடன், வெற்றிக் கோப்பைகள், பதக்கங்கள், மற்றும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களும், அப்பள்ளியின் ஆசிரியர்களும் வணக்கம் மலேசியாவிடம் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த விழாவானது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஓர் அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, அவர்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது என்றால் எள்ளளவும் ஐயமில்லை.