
தாப்பா, பிப்ரவரி-27 – பேராக், தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில், உள்ளூர் வேட்பாளரே தேசிய முன்னணிக்கு பொருத்தமானவராக இருப்பார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவ்வாறு கூறியிருக்கிறார்.
2008 முதல் தாப்பா எம்.பியாக இருந்து வரும் தமது அனுபவத்தில், வெளியாரின் பங்கேற்பை தொகுதி வாக்காளர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை என சரவணன் சொன்னார்.
எனினும், வேட்பாளர் யாரென்ற இறுதி முடிவு அம்னோவைப் பொருத்தது; யார் வேட்பாளர் ஆனாலும், வாக்காளர்கள் குறிப்பாக இந்தியர்களின் ஆதரவைத் திரட்டுவதில் ம.இ.கா கடுமையாக உழைக்குமென்றார் அவர்.
அத்தொகுதியில் உள்ள 6 மாவட்ட வாக்களிப்பு மையங்களில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4,600 பேர் அல்லது 12 விழுக்காட்டினர் ஆவர்.
ஆனால், தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிச் செய்ய 18,000-க்கும் மேற்பட்ட மலாய் வாக்காளர்களைத் தான் குறி வைக்க வேண்டும்; காரணம், ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணியுடன் பக்காத்தான் ஹாரப்பான் ஒத்துழைப்பதால், இந்திய, சீன அல்லது பூர்வக் குடி மக்களின் ஆதரவைப் பெறுவது கடினமல்ல என சரவணன் சுட்டிக் காட்டினார்.
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 59 வயது இஷ்சாம் ஷாருடின் கடந்த வார சனிக்கிழமையன்று மாரடைப்பால் காலமானதை அடுத்து, அத்தொகுதி காலியாகியுள்ளது.
15-ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 2,213 வாக்குகள் பெரும்பான்மையில் அத்தொகுதியைக் கைப்பற்றியது.