கோலாலம்பூர், ஜூலை-25 – கிள்ளான் பள்ளத்தாக்கில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் அளவுக்கு துர்நாற்ற தூய்மைக்கேட்டுக்கு வித்திட்டதாகக் கூறப்படும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில், சுற்றுச் சூழல் துறை திடீர் சோதனை மேற்கொண்டது.
சுங்கை குண்டாங், சுங்கை செம்பா ஆறுகளில் நீர் துர்நாற்றமடைந்ததற்கு, அத்தொழிற்சாலையின் ரசாயணக் கிடங்கிலிருந்து Poly Metha Acrylic Acid எனும் இரசாயணம் கசிந்ததே காரணமென, அச்சோதனையின் போது கண்டறியப்பட்டது.
இரசாயணக் கசிவால், தாங்க முடியாத துர்நாற்றம் ஆற்று நீரோடு ஒட்டிக் கொண்டு விட்டதை சுற்றுச் சூழல் துறையின் அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
இதையடுத்து தொழிற்சாலை வளாகம், கால்வாய்கள், தொழிற்சாலையை ஒட்டிய ஆற்றுப் பகுதி ஆகியவற்றை சுத்தம் செய்யுமாறு தொழிற்சாலை நிர்வாகம் பணிக்கப்பட்டு, அப்பணிகளும் நிறைவடைந்துள்ளன.
விசாரணை முடியும் வரை, தொழிற்சாலையின் செயல்பாட்டு வளாகமும், கருவிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற சுற்றுச் சூழல் குற்றங்களைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய இயற்கை வளம் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் (Nik Nazmi Nik Ahmad), தொழில்துறையினர் சட்டத்திட்டங்களை மதித்து நடக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
அது தொடர்பில் சுற்றுச் சூழல் தர சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டு, இதுவரை இருவர் கைதாகியிருக்கின்றனர்.