ஜெம்போல், மே-12 – நெகிரி செம்பிலான் ஜெம்போலில் இணையம் வாயிலாக குறைந்த விலையில் கார் வாங்க ஆசைப்பட்டு, 41,964 ரிங்கிட்டைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், கொலை மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளார் காப்புறுதி முகவர் ஒருவர்.
Facebook-கில் கார் விளம்பரத்தைப் பார்த்து, அதனை வாங்கும் ஆசையில் WhatsApp வாயிலாக அவர் தொடர்புக் கொண்டுள்ளார்.
Toyota Estima ரக MPV காரை 62,500 ரிங்கிட்டுக்கு வாங்க, அந்தப் பக்கம் இருந்தவரிடம் அவர் ஒப்புதலும் அளித்து விட்டார்.
இதையடுத்து கேட்டுக் கொண்ட படி, 8 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 16 தடவையாக மொத்தம் 41,964.20 ரிங்கிட் பணத்தை அவர் செலுத்தியுள்ளார்.
அது போதாதென்று கடந்த வாரம் அக்கார் நிறுவனத்தைச் சேர்ந்த ஆடவர் எனக் கூறிக் கொண்ட ஒருவர், வழக்கறிஞர் கட்டணமாக மேலும் 6,000 ரிங்கிட்டைச் செலுத்த சொன்ன போது தான் மனிதர் சுதாகரித்து, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்துள்ளார்.
பணம் தர முடியாது என மறுக்கவே, WhatsApp வழியாக அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் குரல் பதிவு அனுப்பப்பட்டிருக்கிறது.
தனது குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி அன்றைய இரவே அவர் பஹாவ் போலீஸ் நிலையத்தில் அது குறித்து புகார் செய்தார்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.