Latestஇந்தியாஉலகம்மலேசியா

இந்திய நடிகர் விக்ரமுடன் தொடர்புடைய Lar gibbon குரங்கு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-இந்திய நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட விசாரணையில் மையமாக இருந்த lar gibbon வகை குரங்கு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. அக்குரங்கு மலேசியாவைச் சேர்ந்தது என்பதும் ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

விக்ரம் அந்தக் குரங்குடன் விளையாடுவது, அதைக் கட்டிப் பிடிப்பது போன்ற காட்சிகள் இருந்த காணொளி ஒன்று இணையத்தில் பரவியது.

அதனை அடுத்து பாதுகாக்கப்படும் அவ்விலங்கை வைத்திருப்பது மற்றும் கையாள்வது குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இஞ்சம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் இல்லத்திலிருந்து அந்தக் குரங்கு ஈரோட்டிற்கு மாற்றப்பட்டதாகச் சென்னை வனவிலங்கு காப்பாளர் யோகேஷ் குலால் கூறியதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவைத் தாயகமாகக் கொண்ட அவ்வகைக் குரங்குகள் ஈரோட்டிற்கும், அதற்கு முன்னதாக மணிப்பூருக்கும் கொண்டு செல்லப்பட்டதற்கான தடயங்களும் உள்ளன.

கேசவநாதன் என்பவரின் இருப்பிடத்தில் ஆண் மற்றும் பெண் என இரண்டு குரங்குகள் கண்டெடுக்கப்பட்டதாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் கே.வி. அப்பல நாயுடு தெரிவித்தார். மூன்று குரங்குகளை வளர்க்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் அவற்றில் ஒன்று முன்னரே இறந்து விட்டதாகவும் கேசவநாதன் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அக்குரங்கு உண்மையிலேயே இறந்து விட்டதா அல்லது ஆவணப்படுத்தப்படாத இடமாற்றம் ஏதேனும் நடந்ததா என்பதை விசாரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கேசவநாதனிடம் இருந்து ரங்கநாதன் அந்த விலங்குகளைப் பெற்றதாக நம்பப்படுவதாகவும், இருப்பினும் இடமாற்றச் சான்றிதழுக்கு அதிகாரிகள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்குரங்குகள் எவ்வாறு நாட்டிற்குள் நுழைந்தன, அவற்றை வைத்திருத்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் தொடர்பான அனைத்து சட்டத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. Lar gibbon இனமானது, அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!