
ஜகார்த்தா, அக்டோபர்-8 – இந்தோனேசியாவில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீ சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில், மலேசியாவில் புகைமூட்டப் பிரச்சனை நீடித்து வருகிறது.
நேற்று மட்டும் இந்தோனேசியா முழுவதும் காட்டுத் தீ ஏற்படக்கூடிய 1,201 வெப்பப் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது முந்தைய நாளைவிட 158 குறைவாகும்.
மத்திய களிமந்தானில் அதிகபட்சமாக 182 வெப்பப் புள்ளிகள் பதிவாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து தெற்கு சுமத்ராவில் 71, மேற்கு களிமந்தானில் 34, ஜாம்பியில் 21, தெற்கு களிமந்தானில் 18 வெப்பப் புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த 61 வான்வழி விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, இந்தோனேசிய வனத் துறை அமைச்சு கூறியது.
அவற்றில் 44 விமானங்கள் தீயணைப்புப் பணிகளுக்கும், 17 விமானங்கள் கண்காணிப்பு மற்றும் வானிலை மாற்ற நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தவும் வனப் பகுதிகளைப் பாதுகாக்கவும், வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 70 ஆயிரமாக உயர்த்தவும் இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகை மலேசியாவையும் பெரிதும் பாதித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, மலேசியாவில் 35 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியது.
புகைமூட்டம் காரணமாக ஜோகூரில் அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று முதல் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



