கோலாலம்பூர், ஏப்ரல் 5 – “அல்லா” காலுறை சர்ச்சையில், இன மற்றும் மதப் பதற்றத்தை தூண்டியதற்காக, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலேவை, கைதுச் செய்யுமாறு, சரவாக் சுற்றுலா, படைப்பாற்றல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.
அந்த சர்ச்சையை தணிக்கும் முயற்சியில் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் தீவிரமாக ஈடுபட்டு வருவதை கரீம் ஒப்புக் கொண்டாலும், அவ்விவகாரத்தில் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய அளவில், அவ்விவகாரம் மேலும் மோசமடையாமல் தீர்வுக் காண உள்துறை அமைச்சு முயல்கிறது. எனினும், உடனடி நடவடிக்கை இல்லாதது அல்லது மிகவும் மெதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறித்து தாம் குழப்பமடைவதாக கரீம் கூறியுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், இன மற்றும் மத தூண்டுதல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
எதிர்ப்பு அல்லது புறக்கணிப்புகளை உருவாக்க முயற்சிப்பவர்கள், அதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் கூடுதல் அழுத்தம் அல்லது நெருக்கடியை மட்டுமே உருவாக்குகிறார்கள்.
நாட்டிலுள்ள, கேகே மாட் கடைகளை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்கள் குறித்தும், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும் கரீம் அவ்வாறு கருத்துரைத்தார்.
கடந்த வாரம் முதலில் பேராக் பீடோரிலுள்ள, கேகே மாட் கடை பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கான வேளை ; ஆகக் கடைசியாக சரவாக், கூச்சிங்கிலுள்ள, கேகே மாட் கடை ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதற்கு காரணமான “அல்லா” காலுறை சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர முடியாது என அக்மல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.