
வாஷிங்டன், ஆகஸ்ட்-3-ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை பிற்பகலில் மீண்டும் தொடங்கும் எனக் கோடி காட்டியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகத் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
வாரக் கடைசியில் ஈரான் மீது பேரளவிலான தாக்குதல்களுக்கு முன்னதாகத் திட்டமிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை அதிலிருந்து அமெரிக்கா பின்வாங்கியது.
அவ்வகையில், ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்கா தரப்பிலிருந்தோ அல்லது ஈரான் சார்பிலோ எந்தவொரு தாக்குதலும் பதிவுச் செய்யப்படவில்லை.
ஈரானோடு, சவூதி அரேபியா மற்றும் கட்டார் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளின் கோரிக்கையை அடுத்தே, இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைக்க ட்ரம்ப் சம்மதித்ததாக வெள்ளை மாளிகைக் கூறிக் கொண்டது.
எனினும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என வாஷிங்டன் எச்சரித்துள்ளது.
ஆனால், ஈரானோ, தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் தாங்கள் கேட்கவில்லை என்றும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான தெஹ்ரானின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.



