
கோலாலம்பூர், ஜூலை 9 – மலேசியர்கள் இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ளவும், திறனை மேம்படுத்தவும் இலக்கவியல் அமைச்சு இலவச பயிற்சிகளை வழங்குவதால் இந்திய சமூகம் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு முழுமையாக பயன் அடைய வேண்டுமென இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் MyDIGITAL Corporation இந்தப் பெருமுயற்சியை மேற்கொண்டிருக்கின்றது. இலக்கவியல் தொழில்நுட்ப அறிவின் வழி மக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதோடு, உலகளாவிய நிலையில் போட்டியாற்றல்மிக்கவர்களாகவும் விளங்க முடியும் என தாம் நம்புவதாக கோபிந்த் சிங் கூறினார்.
நாடு இலக்கவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற முக்கிய அம்சமாக விளங்குவது மக்களுக்கான இலக்கவியல் தொழில்நுட்ப அறிவாகும். இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு ஒரு சாராருக்கும் மட்டுமே என அல்லாமல், அனைத்து மக்களூக்கும் இலக்கவியல் செயற்கை நுண்ணறிவுத் திறனும், அதன் தேவைக்கான விழிப்புணர்வும் இருத்தல் அவசியம்.
ரக்யாட் டிஜிட்டல் (Rakyat Digital) என்பது அரசாங்கத்தையும், Cybersecurity Malaysia, Intel, iTrain, Microsoft, Trainocate போன்ற தொழில்துறைக் கூட்டமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாகும்.
இந்த முயற்சியில் துறைசார் வல்லுனர்களும் அரசாங்க உயர்அதிகாரிகளும் இணைந்து செயல்படுவர். அதோடு துறைசார் வல்லுனர்களும் தனியார் நிறுவனங்களூம் எந்தக் கட்டணமும் இன்றி இந்தப் பயிற்சிகளை வழங்குவதன் காரணத்தால் அதிகமான மலேசியர்கள் இதில் பங்குகொண்டு பயன்பெறலாம் என கோபிந்த் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேல்விவரங்களுக்கு rakyatdigital.gov.my. அகப்பக்கத்தை நாடலாம்.