
புத்ராஜெயா, அக்டோபர் 14 – நெதர்லாந்து மாடல் மறைந்த இவானா ஸ்மிட்டின் (Ivana Smit) தாயாருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசாங்கத்தின் மேல்முறையீட்டை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. குற்றவியல் விசாரணையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குறைபாடுகளுக்காக, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய தனிப்பட்ட சட்டப்பூர்வக் கடமை காவல்துறைக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
18 வயதான இவானா, 2017 டிசம்பர் 7ஆம் தேதி கோலாலம்பூரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 20ஆவது மாடியிலிருந்து விழுந்து, ஆறாவது மாடியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இருப்பினும், இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளதால், காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி, குடும்பத்தினருக்கு அவ்வப்போது தகவல்களை வழங்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.



