Latestமலேசியா

இஸ்ரேல் ஆடவரிடம் துப்பாக்கி பறிமுதல் தொடர்பில் 16 பேர் கைது

கோலாலம்பூர், ஏப் 5 –

ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இஸ்ரேல் ஆடவர் தொடர்பில் இதுவரை 16 நபர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நால்வருடன் இப்போது மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் Razaruddin Husain தெரிவித்தார். அந்த ஆடவருக்கு சுடும் ஆயுதங்கள் விநியோகித்ததன் தொடர்பில் இதற்கு முன் கோலாசிலாங்கூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் மற்றும் மார்ச் 12 ஆம்தேதி அந்த இஸ்ரேல் ஆடவர் இங்கு வந்தது முதல் அவரது கார் ஓட்டுனராக இருந்த கேமரன் மலையைச் சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டனர். மேலும் நான்கு ஆடவர்கள், 25 மற்றும் 41 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக Razarudin னை மேற்கோள் காட்டி பெரித்தா ஹரியான் தகவல் வெளியிட்டது. இது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து மேலும் ஆறு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்னர்.

அவர்களில் 29 மற்றும் 40 வயதுடைய துருக்கியைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள், 39 வயதுடைய ஜோர்ஜிய ஆடவர் , 32 மற்றும் 60 வயதுடைய மூன்று மலேசியர்களும் அடங்குவர் . குற்றவியல் விசாரணைத் துறை மற்றும் சிறப்பு பிரிவு உட்பட பல்வேறு போலீஸ் துறையின் ஒத்துழைப்புடன் ஜோகூர் மற்றும் கோலாலம்பூரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கோலாசிலாங்கூரில் கைது செய்யப்பட்ட தம்பதியரை மேலும் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவு இன்று நீட்டிக்கப்பட்டது. குடும்ப தகராறு தொடர்பாக மற்றொரு இஸ்ரேல் ஆடவரை கொலை செய்வதற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய நபர் ஐக்கிய அரபு சிற்றரசிலிருந்து இங்கு வந்ததாக போலீஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் கடப்பிதழை பயன்படுத்தி மார்ச் 12 ஆம் தேதி கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் மூலம் அந்த 36 வயது சந்தேகப் பேர்வழி இங்கு வந்ததோடு Cryptocurrency மூலம் மலேசியாவில் சுடும் ஆயுதங்களை வாங்கியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!