பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அழைத்துச் சென்ற போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் ஈப்போ, பண்டார் மேரு ராயா, பெர்சியாரான் மேரு ராயா 3இல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து சொற்ப நிலையில் காயத்திற்குள்ளானார்.
நேற்று காலை மணி 10.15 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் மாநில போக்குவரத்து மற்றும் அமலாக்கத்துறையைச் சேர்ந்த லேன்ஸ் காப்ரல் முகமட் பைசோல் டெராமான் ( Mohamad Faizol Deraman ) ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் அவருக்கு முன்னாள் சென்ற வாகனம் திடீரென நின்றதால் அதன் பின்னால் மோதியது .
அந்த விபத்து நடந்தபோது Ipoh Meru Casuarina Hotel லில் நடைபெற்ற இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரீகம் மீதான 7ஆவது உலக மாநாட்டிற்கு அன்வார் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த பேரா போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி மாட் அரிசும் ( Azizi Mat Aris ) தனது காரை உடனடியாக நிறுத்தி காயம் அடைந்த போக்குவரத்து போலீஸ்காரருக்கு முதலுதவி வழங்கினார். மேல் சிகிச்சைக்காக முகமட் பைசோல் (Mohamad Faizol) ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதோடு, அவரது நிலை சீராக இருப்பதாக பேரா போலீஸ் முகநூலில் பதிவிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த விபத்தை நேரில் பார்த்த அன்வார் தமது அனுதாபத்தை தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவரின் சுமைய குறைக்க நிதி உதவி வழங்கப்படும் என கூறியதாகவும் பேரா போலீஸ் துணைத்தலைவர் Zulkafli Sariaat கூறினார்.