தெஹ்ரான், மே-20 – ஈரானிய அதிபர் Ebrahim Raisi சென்ற ஹெலிகாப்டர் அந்நாட்டின் வடமேற்கு மலைப்பகுதியில் மாயமான இடத்தில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பேரளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Dron கருவிகள் மற்றும் மோப்ப நாய்களுடன் 20-க்கும் மேற்பட்ட தேடல் மீட்புக் குழுக்கள் அப்குதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் குழு அடங்கிய 8 அம்புலன்ஸ் வண்டிகளும் முன்னெச்சரிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு உதவ ஈரானிய இராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படைகளும் களத்தில் இறங்கியுள்ளன.
கரடு முரடான மலைப்பகுதி என்பதாலும், மோசமான வானிலை வந்துப் போவதாலும் தேடல் மீட்புப் பணிகள் சவாலைச் சந்தித்து வருகின்றன.
அவசர உதவிக்காக அனுப்பப்பட்ட ஒரு ஹெலிகாப்டரும், அங்கு பனிமூட்டம் மோசமாக இருந்ததால் தரையிறங்க முடியாமல் திரும்பி வந்திருக்கிறது.
இதனால் சற்று கால அவகாசம் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று Azerbaijan நாட்டு அதிபருடன் இணைந்து அணைக்கட்டு திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு விட்டு Raisi ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
ஹெலிகாப்டர் ‘அவசரமாகத் தரையிறங்கியதாகக்’ கூறப்படும் இடத்தில் இருந்து பெரிய சத்தம் கேட்டதாக மலைப்பகுதி மக்கள் கூறியிருப்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
என்றாலும் தங்கள் அதிபரும் உடன் சென்ற மற்றவர்களும் பாதுகாப்பாக மீட்கப்படுவர் என ஈரானிய மக்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.