Latestஉலகம்

உலகக் கிண்ணம்: பெருத்த ஏமாற்றதுடன் விடை பெற்றது பிரேசில்

கோலாலம்பூர், ஜூலை.06-

2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறி அதன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது பிரேசில். இன்று அதிகாலை நடைபெற்ற ‘knockout’ சுற்று ஆட்டத்தில் பிரேசில் 1க்கு 2 கோல்களில் நார்வே அணியிடம் தோல்வி கண்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஆட்டத்தின் முற்பாதியில் பிரேசிலுக்கு பெனல்டி வாய்ப்பு கிடைத்தது. எனினும் Bruno Guimareas அதனைக் கோலாக்கத் தவறினார். நார்வே கோல் காவலர் Orjan Nyland, பந்தை லாவகமாகப் பிடித்து அது கோலாவதைத் தடுத்தார். முற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளிலும் எந்த கோலும் போடவில்லை.

பிற்பாதி ஆட்டமும் கோலில்லாமல் வறட்சியாக இருந்த நிலையில், நார்வே கோல் மன்னன் Erling Haaland 79 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் புகுத்தி அவ்வணியை முன்னணியில் வைத்தார். இதனைச் சற்றும் எதிர்பாராத பிரேசில், தனது ஆட்டத்தைச் சுறுசுறுப்பாக்கியது. அதற்கு சளைக்காமல் ஈடு கொடுத்து விளையாடிய நார்வே ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் பெற்றது. அக்கோலையும் அதன் நட்சத்திர வீரர் Haaland-னே அடித்தார். அது ஐந்து முறை வெற்றியாளரான பிரேசிலை நிலைகுலையச் செய்தது. இறுதியில் கூடுதல் நேரத்தின் போது பிரேசில் முன்னணி விளையாட்டார் Neymar பெனல்டி வாயிலாக அவ்வணிக்கு ஒரு கோலை ஈட்டித் தந்தார். இருப்பினும் அக்கோல் பிரேசில் காலிறுதிக்குள் நுழைய உதவவில்லை. இறுதியில் 1க்கு 2 என்ற கோல்களில் ஆட்டம் முடிவடைந்து பிரேசில் knockout சுற்றுடன் மூட்டையைக் கட்டியது. 1990 க்குப் பிறகு பிரேசில் காலிறுதிக்கு முன்னேற்றாதது இதுவே முதல் முறை. அதே சமயம் ஆறாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்லும் அதன் கனவும் சிதைந்தது. அத்தோல்வி பிரேசில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இவ்வேளையில், உலகக் கிண்ண வரலாற்றில் நார்வே முதல் முறையாகக் காலிறுதிக்குள் நுழைந்தது. அந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய உதவிய Haaland-னை அதன் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!