
உலகிற்கு இந்தியா அளித்த பரிசே தமிழ்; கோலாலம்பூரில் நரேந்திர மோடி புகழாரம்
கோலாலம்பூர், பிப்ரவரி-8,
உலகிற்கு இந்தியா அளித்த பரிசே தமிழ் என, 2-நாள் பயணமாக மலேசியா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
_”தமிழ்தான், இந்தியாவை உலகுடன் இணைக்கும் பாலமாக விளங்குகிறது. தமிழ் இலக்கியம் எல்லையில்லாதது; தமிழ்க் கலாச்சாரம் உலகளாவிய ஒன்று. தமிழ் இலக்கியம் அழியாப் புகழ் கொண்டது”_ என கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றியபோது தமிழ் மொழியின் பெருமையை அவர் வானளாவ புகழ்ந்தார்.
அந்நிகழ்வில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
_”ஏற்கனவே மலாயாப் பல்கலைக் கழகத்தில் தெய்வப் புலவர் ‘திருவள்ளுவர் இருக்கை’ அமைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மலேசியாவில் திருவள்ளுவர் கலாச்சார மையத்தை அமைக்கப் போகிறோம்”_ என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டத்தினரின் பெரும் கைத்தட்டலுக்கு மத்தியில் மோடி அறிவித்தார்.
இவ்வேளையில், இந்தியாவில் மேற்கல்வி பயில விரும்பும் மலேசிய மாணவர்களுக்கு புதிய கல்வி உபகாரச்சம்பள வாய்ப்புகளையும் மோடி அறிவித்தார்.
‘திருவள்ளுவர் உபகாரச்சம்பளம்’ என்றப் பெயரில் அது வழங்கப்படும் என்றார் அவர்.
மலேசியாவில் 2.9 மில்லியன் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். இது உலகின் இரண்டாவது பெரிய இந்திய வம்சாவளி சமூகமாகும் எனக் குறிப்பிட்ட மோடி, கடந்த வாரம் களைக் கட்டிய பத்து மலைத் தைப்பூசம் தமிழகத்தின் பழனி மலையை ஞாபகப்படுத்தும் அளவுக்கு பிரமாண்டமாக இருந்தது கண்டு வியந்ததாக சொன்னார்.
பேராக், பாகான் டத்தோவில் தெலுங்கு சமூகத்தினர் மத்தியில் பிரபலமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஆலயத்தின் கலாச்சார விழா, சீக்கியர்களின் Garba நடனம் உள்ளிட்டவை பற்றியும் அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இயங்குவது பெருமிதம் அளிப்பதாக, அண்மையில் தனது Man Ki Bat போட்காஸ் வாயிலாக 140 கோடி இந்திய மக்களிடம் பகிர்ந்துகொண்டதையும் மோடி நினைவுகூர்ந்தார்.
மலேசியத் தமிழர்கள் பல்வேறு துறைகளில் சமூகத்திற்குச் சேவை செய்து வருகின்றனர்.
அதேபோல் இந்தியாவிலும், துணையதிபர் ராதாகிருஷ்ணன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்ற தமிழர்கள் மிக முக்கியப் பொறுப்புகளில் உள்ளதை மோடி குறிப்பிட்டார்.
இந்தியா-மலேசியா இடையே ஆழமான கலாச்சார நட்பும் உறவும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும், அதனை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மோடி சொன்னார்.
2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி மலேசியாவுக்கு மேற்கொள்ளும் 3-ஆவது பயணம் இதுவாகும்.



