
கோலாலம்பூர், ஜூலை-7-ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான புகார்கள் இனி தானாகவே விசாரணைக்கோ அல்லது அமுலாக்க நடவடிக்கைகளுக்கோ உள்ளாக்கப்படாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது பேசிய பிரதமர், ஊடகவியலாளர்கள் மீதான புகார்கள் முதலில் மலேசிய ஊடக மன்றமான MMC-க்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஊடகப் பணியாளர்கள் மீதான நடவடிக்கைகள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், சுதந்திரமானதாகவும் இருப்பதை உறுதிச் செய்வதே இந்த புதிய நடைமுறையின் நோக்கம் என்றார் அவர்.
ஒரு புகார் அளிக்கப்பட்டது என்பதற்காகவே ஊடகவியலாளர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்றும், அரசாங்கத்தின் மீது விமர்சனம் வைத்ததற்காக அவர்கள் எளிதில் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவின் தரம் குறைந்ததற்கு, ஊடகங்கள் மீதான அமுலாக்க நடவடிக்கைகள் ஒரு காரணம் என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் அவை அரசியல் விமர்சனங்களை ஒடுக்குவதற்காக அல்ல, மாறாக மதம், இனம், ஆட்சியாளர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்வுப்பூர்வமான விவகாரங்களுக்காகவே எடுக்கப்பட்டவை என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.



