எல் நினோ தாக்கம்: ஜனவரி வரை வறண்ட வானிலை

கோலாலம்பூர், மே-16,
வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் ஏற்படுமென எதிர்பார்க்கப்படும் எல் நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால், அடுத்தாண்டு ஜனவரி வரை நாட்டில் வறண்ட வானிலை நிலவும் என காலநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இக்காலக்கட்டத்தில் மழைப்பொழிவு குறையக்கூடும் என்றும், அதனால் வெப்ப அலை, நீர் பற்றாக்குறை மற்றும் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கலாம் என்றும், UMT பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் Chung Jing Xiang கூறியுள்ளார்.
நீண்டகால வறட்சியால் விவசாயம், ஆறுகள் மற்றும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் சொன்னார்.
எனவே, மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், கடும் வெப்ப நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்கவும், திறந்த வெளியில் எரிப்பு நடவடிக்கைகளை தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.
எல் நினோ தாக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், வானிலை மாற்றங்களை MET Malaysia எனப்படும் மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசிஃபிக் பெருங்கடலில் அதிகரித்து வரும் வெப்பநிலை, உலகளாவிய வானிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என, உலக வானிலை அமைப்பும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



