
கோலாலம்பூர், ஏப்ரல்-16-நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள 36 பெட்ரோல் நிலையங்கள், எரிபொருள் கசிவு அதிகம் நடைபெறும் ‘hotspots’ பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், 55 நிலையங்கள் அதிக ஆபத்து பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் போலீஸ் கூறியது.
உலகளாவிய எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் எரிபொருள் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதன் அடிப்படையில் இந்த வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிலையங்களை அடையாளம் காணும் நடவடிக்கை பெர்லிஸ், கெடா, கிளந்தான், பேராக், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் நேற்று காலை முதல் தொடங்கியது.
போலீஸாருடன் இணைந்து பொது நடவடிக்கைப் படையினரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், மானிய எரிபொருள் சரியான பயனர்களிடம் சென்றடைவதை உறுதிச் செய்வதுடன், கடத்தல் மற்றும் சேமிப்பு மோசடிகளை தடுப்பதாகும்.
பெரும்பாலான நிலையங்களில் காலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை கண்காணிப்பு நடைபெறும் நிலையில், 24 மணி நேர நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை நிலைமையைப் பொருத்து தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.



