
சென்னை, ஜூன் 3 – நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில்ஸில் காலை நிகழ்ந்த ஒரு விசித்திரமான விபத்தில் 26 வயதான படக்குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
வெடிகுண்டு வெடிப்பு காட்சி ஒன்றின் படப்பிடிப்பின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ‘கில்லர்’ படக்குழுவினர் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
அதிகாலை 5 மணியளவில், சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், குழு உறுப்பினர் மதன் உயிரிழந்தார்.
படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றி வந்த மதன், இந்த வெடிவிபத்தில் கடுமையாக காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் தினகரன், சூர்யா, சக்திவேல் ஆகிய மேலும் மூன்று படக்குழுவினர் காயமடைந்து, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வெடிவிபத்திற்கான காரணம் குறித்தும், அந்தக் காட்சியைப் படமாக்கும்போது தேவையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த விபத்து, படக்குழுவினரையும் திரையுலகைச் சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



