கோலாலம்பூர், ஏப்.14- குடும்ப உறவுகளில், நட்பு வட்டாரங்களில், நல்ல பழக்க வழக்கங்களில், உடல் சுகாதாரத்தில் என அனைத்து வகையிலும் நல்ல முன்னேற்றம் காணும் ஆண்டாக சித்திரைப் புத்தாண்டு அமைய வேண்டும் என்று தமது வாழ்த்துச் செய்தியில் ம.இ.கா தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்துக்கள் கொண்டாடும் குரோதி சித்திரைப் புத்தாண்டு, சீக்கியர்கள் கொண்டாடும் வைசாக்கி மற்றும் மலையாளி வம்சாவளியினர் கொண்டாடும் விஷு புத்தாண்டு ஆகியவை அனைவருக்கும் முன்னேற்றத்தைக் குவிக்கும் புத்தாண்டுகளாக மலர வேண்டும் என்று டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது அனைவரின் கனவாகவும், ஆசையாகவும் இருக்கிறது. நன்றாக உழைத்தவன் வாழ்க்கையில் தோற்றதில்லை.’ எனவே உங்களின் முழு உழைப்பையும் போடுங்கள். அதன் பலன் நிச்சயம் உங்களை வந்து சேரும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியர்கள் நாம் பல்வேறு மொழிகளையும், பண்டிகைகளையும், பண்பாடுகளையும் கடைப்பிடித்து வந்தாலும், நமக்குள் நாம் இந்தியர் எனும் உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும். ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்று டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.