
கோலாலம்பூர், ஜூலை-1-மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா.) 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மக்கள் நலனை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் 113 இடங்களில் ஒரே நாளில் இலவச மருத்துவ முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, ம.இ.கா.வின் சேவை வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த மாபெரும் மக்கள் நலத் திட்டம், ம.இ.கா. தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் தொலைநோக்கு பார்வை, மக்கள் சேவையை முன்னிறுத்தும் அரசியல் தத்துவம் மற்றும் “மக்களை சென்றடையும் ம.இ.கா.” என்ற உயரிய இலட்சியத்தின் வெற்றியாகும். இந்த வரலாற்று முயற்சிக்கு டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்களும் முக்கிய ஊக்கத்தையும் வழங்கினார்.
ம.இ.கா. 80ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளரான டத்தோ டி.முருகையா அவர்களின் சிறப்பான திட்டமிடல், வழிநடத்தல் மற்றும் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு இந்த மாபெரும் தேசிய நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
இந்த தேசிய அளவிலான மருத்துவ முகாமை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொறுப்பை ஏற்று, ம.இ.கா. தேசிய சுகாதாரப் பிரிவின் தலைவரும், மத்திய செயற்குழு உறுப்பினருமான டாக்டர் தி.நோவலன், நாடு முழுவதும் மாநில மற்றும் பகுதி மருத்துவ ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு சுகாதாரத் துறை, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, இடைவிடாது உழைத்து இந்த வரலாற்று சாதனையை நனவாக்கினார்.
இந்த முகாம்களின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ பரிசோதனைகள், மருத்துவர் ஆலோசனைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த பரிசோதனைகள், கண் மற்றும் பல் பரிசோதனைகள், புற்றுநோய் விழிப்புணர்வு, உடலியக்க சிகிச்சை மதிப்பீடுகள், இரத்த தானம், PEKA B40 உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகளைப் பெற்றனர்.
ஒரே நாளில் , நாடு முழுவதும் 113 இடங்களில் இத்தகைய மக்கள் நலத் திட்டத்தை நடத்தி வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது, ம.இ.கா.வின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் மக்களுக்கான சேவை உணர்வை உலகிற்கு எடுத்துக்காட்டிய வரலாற்றுச் சாதனையாகும்.
இந்த மாபெரும் வெற்றியை சாத்தியமாக்கிய ம.இ.கா-வின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் , துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், ம.இ.கா 80ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளரா டத்தோ டி. முருகையா, மற்றும் நிர்வாகச் செயலாளரா் டத்தோ ஏ.டி. குமரராஜா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியும் மரியாதையும் தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் தி. நோவலன் கூறினார்.
மேலும், இந்த வரலாற்றுச் சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திட அர்ப்பணிப்புடனும் அயராத உழைப்புடனும் பணியாற்றிய அனைத்து மாநில ம.இ.கா. தலைவர்கள், மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள், தொகுதித் தலைவர்கள், மாநில மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள், ம.இ.கா. இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவு நிர்வாகிகள் அனைவருக்கும் டாக்டர் தி. நோவலன் தனது மனமார்ந்த நன்றியையும் உயர்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அதேவேளை, இந்த தேசிய அளவிலான மக்கள் நலத் திட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள், விரிவுரையாளர்கள், மருத்துவம், பல் மருத்துவம், உடலியக்க சிகிச்சை மற்றும் செவிலியப் பிரிவு மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பங்களிப்பின் மூலம் அரிய ஒத்துழைப்பை வழங்கிய AIMST பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பீடாதிபதிகள் (Deans), பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த நன்றியையும் மனப்பூர்வமான பாராட்டுகளையும் டாக்டர் தி. நோவலன் தெரிவித்துக் கொண்டார்.
மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற உயரிய தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டு, ம.இ.கா. தொடர்ந்து மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் என்று டாக்டர் தி. நோவலன் கூறினார்



