
புத்ராஜாயா, அக்டோபர் 13 –
டிஜிட்டல் அமைச்சு மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சின் ஒத்துழைப்புடன், மடானி தீபாவளி 2025 இன் திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கே.எல். சென்ட்ரலில் (KL Sentral (Lot F)), நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.
அரசாங்க ஊழியர்கள், தொழில் துறை பிரதிநிதிகள், சமூக தலைவர்கள் மற்றும் பல்லின மக்கள் கலந்துக்கொள்ளவிருக்கும் இந்நிகழ்வில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“Cahaya MADANI, Sinar Perpaduan” எனும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சி, ஒளி என்பது தீபாவளியின் சின்னமாக மட்டுமல்லாமல், மலேசிய மடானியின் (Malaysia MADANI) அடிப்படை மதிப்புகளான நன்மை, மனிதநேயம் மற்றும் ஒற்றுமையின் ஒளி என்பதனையும் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி, மலேசியாவின் பல்வகை இன, மத மக்களுக்கிடையே மரியாதை, புரிதல் மற்றும் ஒன்றிணைந்த வாழ்வை வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தேசிய முயற்சியாகும்.
இது சமூகத்தின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் Malaysia MADANI தத்துவத்தின் நடைமுறை வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
பாரம்பரிய இந்திய உணவுகள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், கலாச்சார காட்சிகள் ஆகியவை இடம்பெறவுள்ள இவ்விழாவில்
மக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு ஒற்றுமை, சமாதானம் மற்றும் பண்பாட்டு மகத்துவத்தை கொண்டாட வேண்டுமென்று டிஜிட்டல் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.