ஜோகூர், ஜூலை 19 – மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்த விளங்குவதோடு மட்டுமல்லாது விளையாட்டுப் பிரிவிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியின் 28ஆம் ஆண்டின் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
ஏறக்குறைய 755 மாணவர்கள் பங்கெடுத்த இவ்விளையாட்டுப் போட்டியில், திடல்தடப் போட்டிகள், 80 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், கேளிக்கை விளையாட்டுப் போட்டிகள் எனப் பல போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
அதே வேளையில், பெற்றோர்களுக்கும் ஹாக்கி, 100 மீட்டர் ஓட்டப் போட்டியும் முன்னாள் மாணவர்களுக்கும் புதையல் தேடும் போட்டியும் நடைபெற்றது.
கடந்த ஜூலை 14ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில் Grikleen Maintenance Service நிறுவனத்தின் இயக்குநரும், கங்கார் பூலாய் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவருமாகிய குணசேகரன் செல்லதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மாணவர்கள் விளையாட்டில் ஈடுபாடுக் காட்டுவது அவசியம் என்று வலியுறுத்தியதோடு மாணவர்களின் விளையாட்டு பிரிவு மேம்பாட்டுக்காகப் பத்தாயிரம் ரிங்கிட் நன்கொடையாக குணசேகரன் வழங்கியதையும் பள்ளியின் தலைமையாசிரியர் மாயச்சந்திரன் சுப்ரமணியம் தெரிவித்தார்.
1950ஆம் ஆண்டு தொடங்கி காரை நகர் தமிழ்ப்பள்ளி என்னும் பெயரில் செயல் படத்தொடங்கிய அப்பள்ளி, பின்னர் 2011ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதி முதல் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியாகப் பெயர்மாற்றம் கண்டு மூன்று கட்டடங்களுடன் தற்போது செயல்பட்டு வருகிறது.