
கூலிம், அக்.06-கெடா, கூலிமில் மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத ஒருவருடன் பள்ளியை விட்டு வெளியேறியதாகக் கருதப்பட்ட 11 வயது மாணவி இறுதியில் பள்ளியிலேயே கண்டுபிடிக்கப்பட்டார்.
அம்மாணவி உண்மையில் பள்ளிக் கழிவறையில் மறைந்திருந்ததாக கூலிம் மாவட்ட காவல் துறைத் தலைவர் Syamsul Sinring தெரிவித்தார்.
அம்மாணவி காலை 9.20 மணியளவில் காணாமல் போனதாக சக மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். அதனை அடுத்து மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், Sungai Kob காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
அம்மாணவியை காலை 7.20 மணியளவில் அவரது மூத்த சகோதரி பள்ளியில் விட்டுள்ளார். காலை 8 மணிக்கு நடைபெற்ற பள்ளி ஒன்றுகூடலில் அம்மாணவி கலந்து கொண்டது தெரிய வந்தது. ஒன்றுகூடலின் போது சக மாணவி ஒருவருடன் ஏற்பட்ட சிறிய அதிருப்தியால் மனவேதனை அடைந்த அவர், தனது தலையங்கியைச் சரிசெய்துகொள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் வகுப்புக்குத் திரும்பாமல் கழிவறையிலேயே இருந்துள்ளார். இதனிடையே, அம்மாணவி ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளியை விட்டு வெளியேறியதாக சக மாணவி ஒருவர் தெரிவித்த தகவல் உண்மையில்லை என Syamsul Sinring கூறினார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக அவ்வதந்தி உருவாக்கப்பட்டது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வேளையில், மாணவியைத் தேடுமாறு சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிய நிலையில், அவர் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டது குடும்பத்தினருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



