விஜயவாடா, ஆந்திர பிரதேசம், ஏப்ரல் 9 – இந்தியாவில் பெண் குழந்தைப் பிறந்தாலே அதற்குக் கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் காலம் மலையேறி விட்டது எனக் கூறுவார்கள்.
ஆனால், பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கவே செய்கின்றன என்பதற்கு சான்றாக, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
18 மாதப் பெண் குழந்தை கருப்பாக இருப்பதாகக் கூறி, சொந்தத் தந்தையே அதனை விஷம் வைத்துக் கொலைச் செய்திருக்கின்றார்.
பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்து குழந்தையைக் கொன்ற அந்த கல்நெஞ்சக்கார தந்தை, வலிப்பு ஏற்பட்டு தான் குழந்தை இறந்ததாக மனைவியிடம் பச்சையாகப் பொய் சொல்லியுள்ளார்.
குழந்தை அக்ஷயா கருப்பாக பிறந்ததால், அதனையும், அதன் தாயையும் மொத்தக் குடும்பமே கொடுமைப்படுத்தி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
குழந்தையின் உடல், இறந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே குடும்பத்தாரால் அவசர கதியில் புதைக்கப்பட்டிருக்கிறது.
குழந்தை அக்ஷயாவை சுவற்றில் தூக்கி அடிப்பது, அறையில் தனியாகப் பூட்டி வைப்பது, தண்ணீரில் முக்குவது என கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக, அதன் தாய் போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.
ஆந்திர பிரதேச குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், அக்குழந்தையின் மரணம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து முழு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
ஒரு பாவமும் அறியாத குழந்தையைக் கொன்ற நிறவெறிக்கார தந்தை மீது போலீஸ் வழக்குப் பதிவுச் செய்துள்ளது.