Latestமலேசியா

காட்டுத் தீயை எதிர்கொள்வதில் மலேசியாவின் உதவியை ஏற்றுக் கொள்கிறார் பிரபோவோ

ஜகார்த்தா, அக்-16-இந்தோனேசியாவில் பரவியுள்ள காட்டுத் தீ மற்றும் கரிம நிலத் தீயைக் கட்டுப்படுத்த, மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் உதவியைப் பெற அதிபர் Prabowo Subianto ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கான செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகளைத் தேசிய பேரிடர் நிர்வாகம் (BNPB) இறுதி செய்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Arrmanatha Nasir தெரிவித்தார்.

இந்தோனேசியாவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அக்டோபர் 13ஆம் தேதி நிலவரப்படி, தீயணைப்பு வீரர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் என 60,177 பேர் தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீயைக் கட்டுப்படுத்த வானூர்திகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மேக விதைப்பு நடவடிக்கைகளும் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

இதனிடையே இந்தோனேசியா தீயணைப்பு நடவடிக்கைகள் மற்றும் கள முன்னேற்றங்கள் குறித்த அறிக்கையை ஆசியானிடம் சமர்ப்பித்துள்ளது. தீப்பற்றும் இடங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், வானிலை நிலவரங்கள் தொடர்ந்து சவாலாகவே இருப்பதாக Arrmanatha Nasir குறிப்பிட்டார்.

மலேசியத் துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi, செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது, ஒரு விமானம், மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 52 தீயணைப்பு வீரர்களை அனுப்பத் தயார் எனக் கூறியிருந்ததாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எல்லை தாண்டிய புகைமூட்டத்தால் காற்றின் தரம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மலேசியாவும் சிங்கப்பூரும் இதற்கு முன் வலியுறுத்தியிருந்தன. புகைமூட்டப் பாதிப்பைக் குறைக்க வட்டார ஒத்துழைப்பில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் சிங்கப்பூர் கூறியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!