காரில் மூதாட்டி கொலையுண்டதற்கு சொத்து தகராறே காரணம்; பேராக் போலீஸ் தகவல்

ஈப்போ, செப்டம்பர்-21,
பேராக், சிம்பாங் பூலாயில் செப்டம்பர் 7-ஆம் தேதி கார் ஒன்றில் மூதாட்டி கொலையுண்டு கிடந்த சம்பவத்திற்கு, சொத்து தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கொலைக்கான முக்கிய சந்தேக நபர், மூதாட்டியின் உறவினர் ஆவார்; அவர் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என மாநில போலீஸ் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
ஒரு போலீஸ்காரரைக் கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய ஆடவனது காருக்குள், 62 வயது அம்மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னதாக கைதுச் செய்யப்பட்ட 9 பேரும் குடும்பத்தினர் தான் என்றும், உண்மையான நோக்கம் முதன்மை சந்தேக நபர் கைதான பிறகே உறுதியாகும் என்றும் நூர் ஹிசாம் கூறினார்.
அச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த போலீஸ் கான்ஸ்டபிளின் நிலைமை சீராக உள்ளது.
சந்தேக நபர் கைப்பற்றிய கான்ஸ்டபிளின் துப்பாக்கியும் இதுவரை மீட்கப்படவில்லை என நூர் ஹிசாம் தெரிவித்தார்.
போலீஸார் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.