
கோத்தா பாரு, ஜூன் 5- கிளந்தானில் பொது நடவடிக்கைப் படை அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில் 3.1 டன் அரிசியையும், மொத்தம் 68,785 ரிங்கிட் மதிப்புள்ள மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .
தும்பாட்டில் Pangkalan Haram Simpangan, தானா மேராவில் Kampung Lalang Pepuyu, ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காலை மணி 7.30 க்கு தும்பட்டில் சட்டவிரோத தளத்திற்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பல நபர்கள் ஒரு படகிலிருந்து வெள்ளை மூட்டைகளை மிட்சுபிஷி பஜேரோ வாகனத்தில் இறக்குவதைக் கண்டதாக பொது நடவடிக்கை படையின் மூத்த உதவி கமிஷனர் அகமட் ரட்ஷி Ahmad Radzi Hussain தெரிவித்தார்.
அந்த நபர் படகில் குதித்து தாய்லாந்துக்கு அருகேயுள்ள கோலோக் ஆற்றின் கரைக்குத் தப்பி ஓடினார்.
எனினும் பஜேரோ வாகனத்தைச் சோதனையிட்டதில், தாய்லாந்திலிருந்து கோத்தா பாருவைச் சுற்றி விற்பனை செய்வதற்காகக் கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1,485 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு விடியற்காலை மணி 4.30 மற்றும் 5 மணியளவில் தானா மேராவில் Kampung Lalang Pepuyu வில் புரோட்டோன் பெசோனா மற்றும் புரோட்டோன் வாஜா ஆகிய இரு கார்களில் நடத்தப்பட்ட சோதனையில் 32,000 ரிங்கிட் மதிப்புடைய 1,780 கிலோ அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜெலி மற்றும் தானா மேரா சந்தைக்காக இந்த அரிசி தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.



