
கோலாலம்பூர், ஜூலை 18 – கிள்ளான் பள்ளத்தாக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யின் விசாரணை அதிகாரிகள் ஒரு வீட்டில் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் 7.5 மில்லியன் ரிங்கிட்டை கண்டுப் பிடித்தனர்.
ஜோகூரில் சுமார் RM160 மில்லியன் மதிப்புள்ள ஒரு தரவு மைய கட்டுமானத் திட்டத்திற்கான டெண்டரை வாங்கியதில் ஊழல் விசாரணை தொடங்கப்பட்டவுடன் 50 ரிங்கிட் நோட்டுகளான அவை அனைத்தும் அவ்வீட்டில் இருந்த பல்வேறு பெட்டிகளிலும் அலமாரியிலும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
சோதனை நடத்தப்பட்டது மற்றும் பணம் கண்டுப்பிடிக்கப்பட்டதை MACC யின் நடவடிக்கை துணை ஆணையர் டத்தோஸ்ரீ அகமட் குசைரி யஹாயா ( Ahamad Khusair Yahaya ) உறுதிப்படுத்தினார். பணத்தை MACC பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், விசாரணை அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் மேலும் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.
மேலும் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சில தனிப்பட்ட நபர்கள் இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த பணம், திட்டத்திற்கான ஆறு டெண்டர்களைப் பெறுவதற்கு ஈடாக சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட லஞ்சம் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
இரண்டு நிறுவனங்களால் பெறப்பட்ட திட்டத்திற்கான ஒவ்வொரு டெண்டருக்கும் சந்தேக நபர் 2.5 விழுக்காடு லஞ்சம் செலுத்துவதாக நிர்ணயித்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கையில், ஒரு முக்கிய கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்த மேலாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு நிறுவன இயக்குநர்கள் திட்ட டெண்டரை வாங்குவதில் ஊழலில் ஈடுபட்டதாக நம்பப்பட்டதால், அவர்களை MACC தடுத்து வைத்துள்தாக MACC க்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன.
40 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் நேற்று கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றி MACC புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்ட நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.