
கோத்தா திங்கி, செப்டம்பர் 14 – கோத்தா திங்கி–குளுவாங் சாலையின் 31.2ஆவது கிலோமீட்டரில் நேற்று மாலை இடம்பெற்ற இரு வாகனங்கள் மோதிய விபத்தில் கணவன், மனைவி உட்பட மூவர் உயிரிழந்தனர்.
மாலை 6.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், பெரோடுவா ஆக்சியா காரில் பயணித்த 38 வயது மதிக்கத்தக்க ஆடவரும், அவரது மனைவி மற்றும் ஹோண்டா காரின் பயணி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்ப விசாரணையில், கோத்தா திங்கியிலிருந்து குளுவாங் நோக்கிச் சென்ற ஹோண்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறப் பாதைக்குள் நுழைந்ததால், எதிரே வந்த ஆக்சியா மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
ஹோண்டா வாகனத்தின் பின்புற பயணியும், ஆக்சியாவின் முன்புற பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஆக்சியா காரின் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த ஹோண்டா வாகன ஓட்டுநர் மற்றும் முன்புற பயணி கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



