கோலாலம்பூர், டிச 17 – கோலாலம்பூரில் விஸ்மா மெலாயுவிக்கு அருகே சாலை உள்வாங்கிய பகுதியில் சீரமைக்கும் பணிகள் டிசம்பர் மாதம் இறுதியில் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்பகுதியில் வழக்கமான நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா ( Zaliha Mustafa ) தெரிவித்தார். ஜாலான் மஸ்ஜித் இந்தியா போலீஸ் சாவடிக்கு முன்னாள் உள்ள சாலை உள்வாங்கிய இரண்டாவது இடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. மேலும் அருகிலுள்ள தெருக்கள் மற்றும் குழிகள் இருக்கும் பகுதிகள் சீரமைக்கப்பட்டு நவம்பர் 10 ஆம் தேதி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்த பதிலில் ஸலோஹா கூறினார்.
கோலாலம்பூரில் ஆகக்கடைசியாக சாலை உள்வாங்கிய விவகாரம் தொடர்பான அறிக்கை மற்றும் இதுபோன்ற ஆபத்து உள்ள பகுதிகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதா மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படுமா என செனட்டர்
டான்ஸ்ரீ முகமட் பட்மி சே சாலே ( Mohamad Fatmi Che Salleh ) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் இத்தககவலை வெளியிட்டார். . கோலாலம்பூரின் பிரதான சாலையின் மேற்பரப்பில் நிலம் உள்வாங்குவது மீதான நிலவியல் அமைப்பு குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்டுவரும் ஆய்வுக்கு உதவும்பொருட்டு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் 10 மில்லியன் ரிங்கிட்
ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.