
கோலாலம்பூர், செப். 15 – நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் விசாரணைக்குட்பட்ட சந்தேக நபர்களுக்கு இனி ஆரஞ்சு நிற உடை அணிவிக்கப்படாது என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-இன் முடிவை, ஊழல் தொடர்பான சிறப்புக் குழுவான JKmR வரவேற்றுள்ளது.
உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்தப் புதிய நடைமுறையின்படி, தடுப்புக் காவல் உத்தரவுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுபவர்கள் சாதாரண உடைகளை அணிய அனுமதிக்கப்படுவர். தடுப்புக் காவல் உடை, அவர்கள் லாக்கப்பில் இருக்கும் காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
மேலும், கைவிலங்கு அணிவிப்பது கட்டாயமல்ல. ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலையையும் பாதுகாப்புத் தேவையையும் மதிப்பீடு செய்த பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும்.
உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறார்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் கைவிலங்கிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இருப்பினும், விசாரணையின்போது தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என MACC தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்களைத் தொழில்முறையுடனும் மனிதநேயத்துடனும் நடத்துவதோடு, நீதிக் கொள்கைகள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாக JKmR குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, MACC-இன் 2025ஆம் ஆண்டு செயல்பாடுகள், அமலாக்கம், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான அறிக்கையையும் JKmR தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.



