Latest

சனாதன தர்ம அவதூறுக்கு எதிராகப் பத்துமலையில் கண்டனக் கூட்டம்; ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் அழைப்பு

கோலாலாம்பூர், மே-20-“சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்” என தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுச் செய்துள்ளது.

தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா விடுத்துள்ள அறிக்கையில், இத்தகைய அரசியல் பேச்சுகள் மலேசியா உட்பட உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

சனாதன தர்மம் என்பது அமைதி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை என்று குறிப்பிட்ட அவர், அது பாகுபாட்டை வளர்ப்பதாகக் கூறுவது தவறான புரிதல் என்றார்.

மேலும், வர்ணாசிரமக் கொள்கை என்பது பிறப்பின் அடிப்படையிலான ஒடுக்குமுறை அல்ல, அது திறமைகளின் அடிப்படையிலான தொழில் பிரிவே என்றும் நடராஜா விளக்கமளித்துள்ளார்.

இந்துக்கள் அமைதியை விரும்புபவர்கள் என்றாலும், தங்கள் மதத்தின் மீதான அவதூறுகளுக்கு எதிராக எப்போதும் உறுதியுடன் நிற்போம் என்றும் அவர் எச்சரித்தார்.

எனவே, உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சைத் திரும்பப் பெற்று உலக இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தேவஸ்தானம், இது குறித்து கண்டனத்தைப் பதிவுச் செய்ய நாளை மறுநாள் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு பத்துமலை கலாச்சார மையத்தில் அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் கூட்டியுள்ளது.

இதில் தவறாது கலந்துகொண்டு கண்டனத்தைப் பதிவுச் செய்யுமாறு பொது மக்கள் குறிப்பாக இந்துக்களுக்கு தான் ஸ்ரீ நடராஜா அழைப்பும் விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!