
பட்டர்வொர்த், மார்ச்-8 – இந்துக்களின் சமய நம்பிக்கையை அவமதித்த இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது, 3R எனப்படும் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக நிந்திக்கும் வகையில் பேசியதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அல்லது SOSMA சட்டத்தின் கீழ் அவர் உடனடியாக கைதுச் செய்யப்பட வேண்டும் என, பினாங்கு பட்டர்வொர்த் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் போலீஸ் அதிகாரி சி.முனியாண்டி தலைமையில், நேற்று காலை பட்டர்வொர்த் போலீஸ் நிலையத்தில் சம்ரி வினோத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கில் புகார்களும் செய்யப்பட்டன.
முன்னதாக, சம்ரி வினோத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான பட்டர்வொர்த் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தையும் நடத்தினர்.
சம்ரி வினோத்தின் பதிவு, சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவரைக் கைதுச் செய்ய வலியுறுத்தியுள்ளோம்.
புகார்களைப் பெற்றுக் கொண்ட போலீஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக, சி.முனியாண்டி தெரிவித்தார்.
ஏரா வானொலியின் ‘வேல் வேல்‘ வீடியோ சர்சையில் புத்திசாலித்தனமாகக் கருத்துக் கூறுவதாக நினைத்துக்கொண்டு, தனது facebook பதிவில் காவடியாட்டத்தை சம்ரி வினோத் இழிவுப்படுத்தியுள்ளார்.
காவடியாட்டத்தை பேயாட்டத்துடனும் மதுபோதையுடனும் அவர் ஒப்பிட்டுப் பேசியது, இந்துக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரை கைதுச் செய்து நீதிமன்றத்தில் தண்டிக்க வேண்டுமென்றக் கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.