குவாலா திரங்கானு, ஆகஸ்ட் -16 – சரவாக் சுக்மா போட்டியின் ஜிம்னாஸ்திக் பிரிவில் பெண் போட்டியாளர்களை அனுப்புவதில்லை என்ற திரங்கானு அரசாங்கத்தின் முடிவு, அதன் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தாரின் (Ahmad Samsuri Mokhtar) மிதவாத தோற்றத்திற்கு முரணாக உள்ளது.
பாஸ் கட்சியின் வருங்கால பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் ‘பில்டப்’ கொடுக்கப்பட்டவர் ஆளும் மாநிலத்தில், இப்படியொரு முடிவு ஏமாற்றத்தைத் தருவதாக மலேசிய சீனர் சங்கம் (ம.சீ.ச) சாடியுள்ளது.
சீன கோவில் திருவிழாவில் பெண்களின் மேடை நிகழ்ச்சிகளுக்கு அங்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது.
இப்படி அடுத்தடுத்து எடுக்கப்படும் ‘பிற்போக்குத்தனமான’ முடிவுகளால் பெண்கள் சிறுமைப்படுத்தப்படுகின்றனர்.
இது சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாகுமென ம.சீ.ச உதவித் தலைவரும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ ஜெக் செங் (Wee Jeck Seng) கவலைத் தெரிவித்தார்.
சரவாக்கில் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் சுக்மா போட்டிக்கு, ஜிம்னாஸ்திக் பிரிவில் பெண் விளையாட்டாளர்களை அனுப்பாத ஒரே பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் கீழுள்ள மாநிலமாக திரங்கானு திகழ்கிறது.
ஜிம்னாஸ்திக் போட்டியில் பெண்கள்அணியும் ஆடைகள் இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரங்கானு ஆகக் கடைசியாக 2022 சுக்மா போட்டிக்கு, அப்பிரிவின் பெண் விளையாட்டாளரை அனுப்பியிருந்தது.
PN ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களான கிளந்தான், கெடா, பெர்லிஸ் மூன்றும் பெண்களை ஜிம்னாஸ்திக் போட்டிக்கு அனுப்புகின்றன.