ஈப்போ, ஜூலை 6 – சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் உயிருக்கு மிரட்டல் ஏற்படும் பகுதிகளில் அது தொடர்பான எச்சரிக்கை அடையாளம் வைப்பது மற்றும் குழிகளை மூடுவது போன்ற தொண்டூழிய நடவடிக்கையில் ஈப்போவைச் சேர்ந்த பி. பத்மநாதன் ஈடுபட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
முதலில் சாலைகளில் ஆபத்தை ஏற்படுத்தும் குழிகள் இருந்தால் அவற்றை கண்டறிந்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் உடடினயாக நடவடிக்கையில் அவர் ஈடுபடுகிறார்.
முகநூல் பக்கங்களில் சாலையில் ஆபத்தான இடங்கள் குறித்து எவரும் பதிவிட்டிருந்தால் பத்மநாதனும் Ikatan Silaturahim சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த சில தொண்டூழியர்களும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து ஊராட்சி மன்றங்கள் அல்லது பொதுப்பணி அமைச்சிற்கு அனுப்பிவைக்கின்றனர்.
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தவறினால் அந்த குழிகளைச் சுற்றி வெள்ளை வர்ணத்தை பூசி வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கைகளை வைப்போம் என பத்மநாதன் தெரிவித்தார்.
தன்னலம் கருதாமல் இந்த பணியைச் செய்வதற்கு நாடு முழுவதிலும் 50க்கும் மேற்பட்ட குழுவினரைக் கொண்டுள்ளோம் என அவர் கூறினார்.
தமது குழுவில் தற்போது 5 உறுப்பினர்கள் இருப்பதாகவும் பெரும்பாலும் இரவு நேரங்களில் வாரத்தில் மூன்று அல்லது இரண்டு நாட்களில் இந்த பணிக்காக தாங்கள் நேரத்தை ஒதுக்குவதாக அவர் கூறினார்.