சிங்கப்பூரில் ஆயுதமேந்திய கொள்ளை; ஆறு மலேசியர்களுக்கு சிறை

சிங்கப்பூர், செப்-15–சிங்கப்பூரில் King Albert Park பூங்காவில் உள்ள சொகுசு பங்களாவில், போக்கர் விளையாடிக் கொண்டிருந்த 11 பேரைக் கட்டிப் போட்டு, 4.9 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் ஆறு மலேசியர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அச்சம்பவம் 2024 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
பாராங் கத்திகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளுடன் சென்ற கொள்ளையர்கள், பெரும்பகுதி கிரிப்டோகரன்சியாக இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, இரண்டு கார்களில் சிங்கப்பூரை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆறு பேரும் ஆயுதமேந்திய கும்பல் கொள்ளை மற்றும் கொள்ளைப் பணத்தை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு மாற்றியதன் மூலம் பணமோசடி செய்த குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டனர்.
கொள்ளை சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரிகள் என நம்பப்படும் 35 வயது Wong Chi Sanனுக்கும் 30 வயது Goh Boon Tongங்குக்கும் தலா 12 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறைத்தண்டனை, 24 பிரம்படிகள் மற்றும் 4,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே, கொள்ளைக்கு உதவிய 49 வயது Mohd Hamidon Ahmedட்டுக்கு 10 ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. கொள்ளைக்காக அதிகமான ஆள் பலத்தைத் திரட்ட Wongங்கும் Gohவும் அவருக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.



