
புத்ராஜெயா, டிசம்பர்-9, மேற்காசிய நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் வட்டார நிலைத்தன்மை மீதான அதன் தாக்கம் குறித்து மலேசியா அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
தற்போதைக்கு பேராளரகம் வாயிலாக அங்குள்ள மலேசியர்களைத் தொடர்புகொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா கூறியது.
பேராளரகத்தில் இதுவரை பதிந்துகொண்டுள்ள 37 மலேசிய மாணவர்களும், இதர 5 மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து ஆகக் கடைசி தகவல்களை அவ்வப்போது வழங்கி வருவோம்.
உதவித் தேவைப்படும் மலேசியர்கள் பேராளரகத்தைத் தொடர்புகொள்ளலாம் என விஸ்மா புத்ரா கூறியது.
முன்னதாக சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை (Damascus), கிளர்ச்சி படைகள் கைப்பற்றியதை அடுத்து, அதிபர் பஷார் அல் ஆசாத் (Bashar al-Assad) தப்பியோடினார்.
தனது தந்தையைப் போலவே, 2000-ஆம் ஆண்டிலிருந்து சிரியாவை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் அதிபர் பஷார்.
குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் ஆசாத்தின் சர்வாதிகாரத்தால் உள்நாட்டு போர் மூண்டு 5 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர், உள்நாட்டிலேயே புலம் பெயர நேர்ந்தது; தவிர, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
இதனிடையே ஆட்சிக் கவிழ்ந்து தப்பியோடிய பஷார், விமான விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.