Latestமலேசியா

சிறப்பாக நடைப்பெற்ற UPSI பல்கலைக்கழகத்தின் ‘அறிவுச்சுடராழி’ அனைத்துலக தமிழ்ப் புதிர்ப்போட்டி

தஞ்சோங் மாலிம், ஜூலை-2 – பேராக், தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (UPSI) வளர்தமிழ் மன்றம் முதன்முறையாக ஏற்பாடு செய்த, ‘அறிவுச்சுடராழி’ அனைத்துலக அளவிலான தமிழ் இலக்கண -இலக்கியப் புதிர்ப்போட்டியின் நிறைவு விழா கடந்த ஜூன் 27-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

UPSI பல்கலைக்கழக புதிய வளாகத்தில் உள்ள ‘Panggung Percubaan’ அரங்கில் நடைபெற்ற இப்போட்டி, மாணவர் பிரிவு மற்றும் பொதுப் பிரிவு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

18 முதல் 25 வயதுக்குட்பட்ட உள்நாட்டு உயர்கல்விக்கூட மாணவர்கள் பங்கேற்ற பிரிவில், 5 சுற்றுகளின் முடிவில் UPSI பல்கலைக்கழகத்தின் ‘முக்கனல்’ அணியினர் முதலாம் இடத்தை வென்றனர்.

மலாயாப் பல்கலைக்கழகத்தின் ‘அறிவன் வாகையர்’ மற்றும் ‘நற்றமிழர்’ அணியினர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும், தெங்கு அம்புவான் அஃவ்சான் கல்விக் கழகத்தின் ‘கலக்கப்போவது யாரு’ அணியினர் நான்காம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.

25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பொதுப் பிரிவில் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து 18 குழுக்கள் பங்கேற்றன.

இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய 6 குழுக்களில், பெரும்பாலும் ஆசிரியர்களைக் கொண்ட ‘முச்சுடர்’ அணியினர் 3,000 ரிங்கிட் ரொக்கப்பரிசுடன் முதலாம் இடத்தை வாகை சூடினர். ‘ஆதித்தன்’ அணியினர் இரண்டாம் இடத்தையும், ‘சுடரி’ மற்றும் ‘சுடர்பரிதி’ அணியினர் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றனர்.

இந்நிகழ்வுக்கு தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சரும் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் தலைமை தாங்கிச் சிறப்புச் செய்தார்.

மொழி என்பது வெறும் தொடர்பாடல் கருவி மட்டுமல்ல, அது நமது அடையாளம் என்று குறிப்பிட்ட அவர், பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளைச் சமுதாய நலனுக்காகவும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக இணை வேந்தர் பேராசிரியர் முனைவர் நோர் காலிட் மற்றும் மொழி தொடர்பியல் புலத் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் மசூரா மஸ்துரா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!