
கங்கார், அக்டோபர்-3,சிறார் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் தன்முனைப்புப் பேச்சாளர் தொடர்பில், போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பான புகார் வெள்ளிக்கிழமை அதிகாலைப் பதிவுச் செய்யப்பட்டதாக பெர்லிஸ் மாநில போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஹம்சா ஹஷிம் தெரிவித்தார்.
2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பேச்சாளரால் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டவர்கள் இருந்தால், அவர்கள் முன்வந்து போலீஸில் புகார் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்த சுயேச்சைப் பேச்சாளர் பங்கேற்கும் அனைத்து பள்ளி நிகழ்ச்சிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சிடேக் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு வழிவிடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பில் அமைச்சு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது என உறுதியளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



