Latestஉலகம்

சிறுவர் மருத்துவமனை நன்கொடையில் முறைகேடு: ராஜபக்ஷேவின் மனைவி ஷிராந்தி கைது

கொழும்பு, அக்டோபர்-8 – இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷே, சிறார் மருத்துவமனைக்காகத் திரட்டப்பட்ட நன்கொடை நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த 73 வயது ஷிராந்தி, திங்கட்கிழமை கொழும்பு திரும்பிய நிலையில், ஊழல் தடுப்பு அதிகாரிகள் நேற்று அவரது இல்லத்தில் கைதுச் செய்தனர்.

அவர் தொடர்புடைய Siriliya Saviya அறக்கட்டளை, கொழும்பிலுள்ள Lady Ridgeway சிறுவர் மருத்துவமனைக்கு சிறப்பு scanning கருவி வாங்குவதற்காகத் திரட்டிய ஒரு கோடி இலங்கை ரூபாய் நன்கொடை தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது.

எனினும், அந்தக் கருவியை சீன அரசாங்கம் ஏற்கெனவே நன்கொடையாக வழங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஷிராந்தி, நன்கொடைப் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

அந்தப் பணம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் பாதுகாப்பாக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷேவின் பேச்சாளரும் தெரிவித்துள்ளார்.

நடப்பு அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ராஜபகேஷே குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான நீண்டகால ஊழல் விசாரணைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கைது அமைந்துள்ளது.

முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷேவின் மகன்களான நாமல் மற்றும் யோஷித ராஜபக்ஷே ஆகியோரும் வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!