
ஷா ஆலாம், ஜூலை-8 – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள எந்தவொரு வணிக வளாகத் தொழுகை அறைகளிலும் வெள்ளிக் கிழமைத் தொழுகை நடத்துவதற்குச் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளிக்கவில்லை என, சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் MAIS அறிவித்துள்ளது.
வணிக வளாகங்களில் வெள்ளிக் கிழமைத் தொழுகையை விரிவுபடுத்துவது குறித்து இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் Zulkifli Hasan முன்வைத்த பரிந்துரைக்கு விளக்கம் அளிக்கும் வகையில், MAIS தலைவர் டத்தோ Salehuddin Saidin இன்று இந்த அறிக்கையை வெளியிட்டார்.
வணிக வளாகங்களில் வெள்ளிக் கிழமைத் தொழுகை அனுமதிக்கப்பட்டால், அது தற்போதுள்ள மசூதிகளின் முக்கியத்துவத்தையும், அங்கு தொழுகையாளர்களின் வருகையையும் குறைக்கக்கூடும் என்ற காரணத்தினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் தற்போது 448 மசூதிகளும், வெள்ளிக் கிழமைத் தொழுகைக்கான அனுமதி பெற்ற 379 தொழுகை அறைகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள முஸ்லீம்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யப் போதுமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பெரும்பாலான வணிக வளாகங்களின் அருகிலேயே மசூதிகள் அமைந்துள்ளன.
எனவே, முஸ்லீம்கள் தங்களின் வழிபாடுகளுக்குத் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மசூதிகளையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என சமய மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.



