சிங்கப்பூர், ஜூன் 20 – சிங்கப்பூரில், தன்னை “தெய்வ பிரதிநிதி” என கூறிக் கொண்டு, தனது தொண்டர்களை மூளைச் சலவைச் செய்ததோடு, கீழ்படிய மறுத்தவர்களை , மலத்தை உண்ணுமாறும், கொடூரமாக பற்களை பிடுங்கியும் தண்டனை கொடுத்ததாக கூறப்படும் பெண் ஒருவருக்கு, பத்தரை (10 1/2) ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
54 வயது வூ மே ஹோ (Woo May How) எனும் அந்த சிங்கப்பூர் பெண், ஏமாற்றியது, கடுமையான காயங்களை ஏற்படுத்தியது உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு நீதிமன்றம் அந்த தண்டனையை விதித்தது.
அவருக்கு எதிராக இதர 45 குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
2012-ஆம் ஆண்டு தொடங்கி, எட்டாண்டுகளாக, இந்தியாவில் புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரான ஸ்ரீ சக்தி நாராயணி அம்மாவின் சீடர்களான சுமார் 30 பேரை வூ வழிநடத்தி வந்துள்ளார்.
வூ தனது ஆன்மீக அமர்வுகளின் போது, தாம் கடவுள் மற்றும் ஆவிகளுடன் தொடர்புக் கொள்ளக்கூடிய ஒரு “தெய்வ பிரதிநிதி” எனவும், கர்மாவை போக்கும் ஆற்றல் உடையவர் எனவும் கூறி தனது சீடர்களை மூளைச் சலவைச் செய்துள்ளார். அதனால் தம்மை அவர்கள் “தெய்வம்” என அழைக்க வேண்டுமெனவும் அவர் பணித்துள்ளார்.
அதோடு,இந்தியாவில் வீடுகளையும், மாடுகளையும் வாங்கப் போவதாக கூறி, சீடர்களிடமிருந்து, 70 லட்சம் சிங்கப்பூர் டாலர் பணத்தையும் ; நிதிக்கழக்கங்களிடமிருந்து 66 லட்சம் டாலர் பணத்தையும் பெற்று அவர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.