Latestமலேசியா

சுகாதாரப் பணியாளர்களின் சீருடை, தையல் கூலி தாமதம்; MOH விளக்கம் அளிக்க வேண்டும் – லிங்கேஸ்வரன்

கோலாலம்பூர், செப்.14 – சுகாதாரப் பணியாளர்களுக்கான சீருடைத் துணி விநியோகம் மற்றும் தையல் கூலி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சுகாதார அமைச்சு உடனடியாக விளக்கமளித்து, விரைந்து தீர்வு காண வேண்டும் என செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியை எட்டியுள்ள நிலையிலும், சில பணியாளர்கள் இன்னும் சீருடைத் துணி மற்றும் தையல் கூலியைப் பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

தமது முகநூல் பதிவுக்கு கிடைத்த 718 கருத்துகள் மற்றும் 611 பயனர் கணக்குகளின் பதில்களில், சீருடை விநியோகத் தாமதம், நிலுவைத் தையல் கூலி மற்றும் துணியின் தரம் குறித்து நாடு முழுவதும் புகார்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சில துணிகள் கடினமாகவும், வெப்பமாகவும், வியர்வையை உறிஞ்சாத வகையிலும் இருப்பதாகவும், இதனால் சிலர் சொந்த செலவில் துணி அல்லது சீருடை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு PTJ-யிலும் விநியோக நிலவரத்தை சரிபார்த்து, தாமதத்திற்கான காரணம் மற்றும் தீர்வு தேதியை சுகாதார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.

மேலும், துணியின் தரத்தை மறுஆய்வு செய்வதுடன், துணி மற்றும் தையல் செலவை உள்ளடக்கிய அலவன்ஸ் வழங்குவது போன்ற மாற்று வழிகளையும் பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!