
ஈப்போ, ஜூலை 31 – சுங்கை பாரி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட 15 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தனது 14 வயது மகள் கிர்த்திஷாவை இழந்த தந்தை தாயாளராஜ் மற்றும் ராஜேனாவை( வயது 14) இழந்த தந்தை சசிதரன் ஆகிய இருவரும் இதுபோன்ற துயரச் சம்பவம் இனி ஒருபோதும் நிகழக்கூடாது என்பதை உறுதி செய்ய அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக இன்று காலை 10.30 மணியளவில் புந்தோங்கில் உள்ள கம்போங் பாரு போலீஸ் நிலையத்தில் அவ்விரு குடும்பங்களும் புகார் செய்தனர்.
கடந்த ஜூலை 24-ஆம் தேதி கிர்த்திஷாவும், அவரது தோழி ராஜேனா இருவரும் கைவிடப்பட்ட சுங்கை பாரி அடுக்குமாடி வளாக குடியிருப்பில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
பல ஆண்டுகளாக கைவிடப்பட்டுள்ள அந்தக் கட்டிடம் எந்தவித பாதுகாப்பு வேலியும், கண்காணிப்பும் இன்றி பொதுமக்கள் எளிதில் நுழையக்கூடிய நிலையில் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடிந்திருக்கும் என்றும் அவ்விரு மாணவிகளின் தந்தைகளும் செய்திருந்த போலீஸ் அபுகாரில் தெரிவித்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இனி யாரும் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைய முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, முன்னாள் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்ரமணியம், மாணவிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், இந்தச் சம்பவம் மீண்டும் நிகழாத வகையில் மாநில அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காவல்துறையின் விசாரணை நடைபெற்று வருவதால் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், உண்மையை காவல்துறையே வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, பேராக் மாநில சுகாதாரம், மனிதவள மேம்பாடு, இந்தியர் நலன் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன், கட்டிடம் தொடர்பாக சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாக விளக்கம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஊராட்சி மன்றத்திற்கு பொறுப்பை வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர் சந்திரா இங் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
புந்தோங் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டிடம் இடிக்கப்படும் வரை போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பு காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், பகல் மற்றும் இரவு நேரங்களில் காவல்துறை ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரே ஒரு பாதுகாவலர் இருந்தால் போதாது.
உயிரிழப்பு ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், விபத்து நடைபெறுவதற்கு முன்பே பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



