சுங்கை பூலோ, மே 5 – Kem Sungai Buloh ஆற்றுக்கு அருகே ஏற்பட்ட நீர் பெருக்கில் ஆடவர் ஒருவர் இறந்ததோடு மற்றொருவர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 27 வயதுடைய பாகிஸ்தான் ஆடவரின் சடலத்தை மீட்புக் குழுவினர் நேற்று மீட்டனர். மற்றொரு பாகிஸ்தான் நபர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தகவல் பெற்றதை தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஏழு மீட்புப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயைணைப்புத்துறையின் நடவடிக்கை பிரிவுக்கான உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
அந்த ஆற்றின் கரையோரம் இரண்டு ஆடவர்கள் காணப்பட்டதாகவும் நீர் பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவ்விருவரும் காணவில்லையென நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. காணாமல்போனவர்களில் ஒருவர் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. அவர்கள் காணாமல்போன இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் Jalan Rahidin பாலத்திற்கு அருகே ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.