
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்-31-சூதாட்ட விவகாரம் குறித்த தமது கடுமையான கருத்துக்கள், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமைக் குறி வைக்கப்பட்டவை அல்ல என கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சனுசி முஹமட் நோர் மீண்டும் கூறியிருக்கிறார். அக்கருத்துகள் பெரும் செல்வந்தர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் இலக்கு வைக்கப்பட்டவை. தமது கருத்துகளின் விளக்கங்களை பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருக்க அவ்விளக்கம் அவசியம் என அவர் கூறினார்.
சூதாட்டம் மீதான தமது கருத்துகள் சமய ஆசிரியர்களையோ, மதத் தலைவர்களையோ, பிரதமரையோ சுட்டிக் காட்டிக் கூறப்பட்டவை அல்ல. அவை சூதாட்டப் பெரும்புள்ளிகளை நோக்கியது. அக்கருத்துகள் கடுமையானவைதான்; ஆனால் உண்மையானவை என சனுசி தெளிவுபடுத்தினார்.
நேற்று Generasi Pewaris Sejahtera Negeri Kedah 2026 மாநாட்டில் உரையாற்றிய சனுசி, மற்றவர்களின் விளக்கங்களை நம்பாமல், “மூல ஆதாரத்திலிருந்து” தகவல்களை பார்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் என்ற முறையில் செல்வாக்கையும் அதிகாரத்தையும் தொடர்ந்து பயன்படுத்தி, தேவையான விஷயங்களில் குரல் எழுப்புவது தமது உரிமை என்றும் கூறினார்.
கெடாவில் லாட்டரி நடவடிக்கைகளுக்கு மாநில அரசாங்கம் விதித்த தடையை ரத்து செய்ய நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தவர்களையே தாம் குறிப்பிடுவதாக சனுசி ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அவர் சூதாட்டம் தொடர்பாக பிரதமருக்கு எதிராகப் பேசுவதாக விமர்சகர்கள் அவரைக் குறைக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



